ட்ரெண்டிங்

கொளத்தூர், மேட்டூரில் மக்கள் சந்திப்புத் திட்ட முகாம்!

 

சேலம் மாவட்டம், கொளத்தூர், மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி. இ.ஆ.ப. தலைமையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் இன்று (அக்.24) நடைபெற்றது. இம்முகாம்களில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர், எம்.பி. ஆகியோர் வழங்கினர். 

 

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 4 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தகுதியான அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. குறிப்பாக, இலவச வீட்டுமனைப் பட்டாவானது நத்தம்

புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வரும் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர்களுக்கும் பட்டா வழங்கி வருகிறோம்.

 

அதேபோன்று ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மனுக்களைக் கொண்டுவந்துள்ள பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தங்களது மனுக்களை கணினியில் பதிவு செய்து அதன் ஒப்புகைச் சீட்டினை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டை பெறுவதால் தொடர்புடைய துறைகளுக்கு மனுக்களை எளிதாக அனுப்பி வைத்து தீர்வு காண முடியும். இம்முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களும் விரைந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.