ட்ரெண்டிங்

முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது!

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஜல்லூத்து மலை ஏரிக்காடு கிராமத்தை ஒட்டிய பகுதியில் வேட்டை கும்பல் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், உதவி வனப்பாதுகாவலர் செல்வக்குமார் தலைமையில் வாழப்பாடி வனச்சரகர் அன்னப்பன் மற்றும் வனக்காவலர்கள் அப்பகுதியில் நேற்று முன்தினம் (ஜன.11) ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 

அப்போது காட்டிற்குள் முயலை வேட்டையாடி கறியாக வெட்டிக்கொண்டிருந்த 3 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அயோத்தியாபட்டணம் ஏரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சந்தனப்பாண்டி (வயது 23), ராமதாஸ் (வயது 27), கார்த்திக் குமார் (வயது 33) எனத் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து வேட்டையாடப்பட்ட முயலின் கறி, வலையைப் பறிமுதல் செய்தனர். 

 

பின்னர் அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

கைதான 3 பேரையும் மாவட்ட வன அலுவலர் முன்பு ஆஜர்படுத்தினர். அவர், தலா ரூபாய் 5,000 வீதம் ரூபாய் 15,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த அபராதத்தொகை 3 பேரிடம் இருந்தும் வசூலிக்கப்பட்டது. வாழப்பாடி வனப்பகுதியில் தொடர்ந்து வேட்டை கும்பல் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.