தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.13) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோடு பகுதியில் 1102.25 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 564.44 கோடி செலவில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தையும், அதில் அமைக்கப்பட்டுள்ள ட்டுள்ள நிர் நிர்வாகக் கட்டடம், நுழைவு வாயில் வளைவுகள், விருந்தினர் விடுதி மற்றும் 9 வளாகங்களையும், அதனைச் சார்ந்த 126 கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவச் சிகிச்சைகளை கால்நடைகளுக்கு அளிக்கவும், இரண்டாம் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.
காணொலிக் காட்சி வாயிலாக சேலம் மாவட்டத்திலிருந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலையரசன், டி.எம்.செல்வகணபதி, சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மரு.பாரதி, சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர்.இளங்கோ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


