ட்ரெண்டிங்

தொடர்ந்து சாராய விற்பனை..... குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்!

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சாத்தப்பாடியைச் சேர்ந்தவர் கண்ணனின் 25 வயது மகன் தனபால். இவர் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், காவல்துறையினர் பலமுறை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனினும், ஜாமீனில் வெளியே வரும் தனபால் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த தனபாலை, கடந்த ஜூன் மாதம் 27- ஆம் தேதி அன்று ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த தனபாலை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்துக்கு பரிந்துரைச் செய்திருந்தார். இதையடுத்து, தனபாலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  

தனபால் மீது 20- க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.