ஒரே நாடு, ஒரே தேர்தல் அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா 2024 (129 வது திருத்தம்) மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள்( திருத்த) மசோதா 2024) குறித்து ஆய்வு செய்ய கூட்டப்பட்ட, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் மக்களவை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட கருத்துகள் குறித்து தி.மு.க.வின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், சேலம் மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆய்வுக் கூட்டத்தில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு என்றும் கேசவ நந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றத்தினுடைய 13 நீதியரசர்கள் அடங்கிய அரசமைப்பு சட்ட அமர்வில்,பாராளுமன்ற ஜனநாயகம் என்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு எனவும் அதை மாற்றுவதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என அந்த தீர்ப்பில் தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே தற்போதைய சட்ட திருத்தம் செல்லாது. அப்படி பாராளுமன்ற ஜனநாயகத்திற்குரிய அரசமைப்பு சட்டத்தில் உள்ள பிரிவுகளை திருத்த முடியும் என்று அரசு கருதினால் இது போன்ற மற்ற அடிப்படை உரிமைகளான மதசார்பின்மை, சமூகநீதி மற்றும் ஜூடிசியல் ரிவியூ போன்ற அடிப்படை உரிமைகளை, கட்டமைப்புகளை மாற்ற முடியும் என்ற நிலைப்பாடு குறித்து ஒன்றிய சட்ட அமைச்சகம் தெளிவான தரவுகளோடு எழுத்து பூர்வமான விரிவான பதிலை இந்த குழுவின் உரிய ஆய்விற்கு சமர்ப்பிக்க வேண்டும்.நாட்டின் இரண்டாவது குடிமகனாகக் கருதப்படுகிற உதவி குடியரசுத்தலைவர் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பையும், கேசவ நந்த பாரதி வழக்கின் தீர்ப்பையும் நிராகரிக்கவேண்டும் என தெரிவித்திருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரே தேர்தல் நடத்துவது செலவினத்தை குறைக்கும் என்று தெரிவிப்பதற்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரத்தையும் இந்தக் குழுவிற்கு வழங்கப்படவில்லை. குறிப்பாக ஐந்து ஆண்டுகளில் இடைக்கால தேர்தல்களும் நடத்த வேண்டிய பல்வேறு சூழ்நிலைகள் இருப்பதால் தேர்தல் செலவினம் குறைவதற்கு வாய்ப்பில்லை. இது தொடர்பாக சட்ட அமைச்சகம் தெளிவான ஒப்பிட்டு வாக்குமூலத்தை இந்த குழுவின் ஆய்விற்கு எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் பொழுது கொள்கை முடிவுகளை மட்டுமே அறிவிக்க இயலாது. மாறாக, வளர்ச்சி பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது . அதேபோல அத்தியாவசிய பணிகளை தொடர்வதிலும் எந்த சிக்கலும் இல்லை. இவைகள் தொடர்பான ஆழமான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன். இவ்வாறு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


