சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, செங்கரடு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் கூலித்தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி சரோஜா, இருவருக்கும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் மணிகண்டன், சுக்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 17) மாலை தந்தை கணேசன் உடல் நலக்குறைவுக் காரணமாக உயிரிழந்தார். தனது தந்தை உயிரிழந்த சோகம் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பொதுத்தேர்வில் பங்கேற்க மாணவன் மணிகண்டன் தேர்வுக்கு தயாராகி வலசையூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மையத்திற்கு தேர்வு எழுதுவதற்காக, தந்தையின் உடல் முன்பாக நின்று தந்தையை வணங்கி, தாயிடம் கூறிவிட்டு புறப்படும் காட்சி பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று வரலாற்று பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


