ட்ரெண்டிங்

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி- ரூபாய் 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இலவச தரிசன டோக்கன் பெற திரண்ட போது திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

 

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் நாளை (ஜன.10) வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.இதையொட்டி, நாளை அதிகாலை 04.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நாளை முதல் ஜன.19- ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், நேற்று திருப்பதி சீனிவாசம் தங்கும் விடுதி வளாகம் உள்பட 8 மையங்களில் 90 கவுண்ட்டர்களிலும் திருமலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் 4 கவுண்ட்டர்களிலும் என மொத்தம் 94 கவுண்ட்டர்களில் ஜன.10,11,12 ஆகிய 3 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்காக இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி இன்று (ஜன.09) அதிகாலை 05.00 மணியில் இருந்து சுமார் 1.20 லட்சம் டோக்கன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மீதமுள்ள நாட்களுக்கு ஜன.13-ம் தேதியில் இருந்து ஜன.19-ம் தேதி வரை டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சூழலில், வைகுண்ட துவார தரிசன டோக்கன்கள் வாங்குவதற்காக நேற்று காலை முதலே பக்தர்கள் மேற்கண்ட குவியத் தொடங்கினர். அதில், சீனிவாசம் தங்கும் விடுதி திருப்பதி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளதால், அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

 

அவர்கள் அங்குள்ள கவுண்டர்கள் முன்னால் திரண்டு இருந்தனர். நேற்றிரவு 07.00 மணியளவில் சீனிவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள கவுண்டர்கள் திறக்கப்பட்டன. அப்போது அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்ட்டர்களில் நுழைய முயன்றனர். அந்த நேரத்தில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

 

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அவர்களை தேவஸ்தான ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் சேலத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மற்ற 6 பக்தர்களும் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 

 

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 30 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர். 

 

உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.