சேலம் மாவட்டத்தில் 300- க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் செயல்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெல்ல ஆலைகளில் வெல்லம் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வெல்லம் தயாரிப்பில் செயற்கை நிறமூட்டிகளைச் சேர்த்தும், வெள்ளை சர்க்கரையும் சேர்த்து வெல்லம் தயாரிப்பதாக சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஓமலூர், காமலாபுரம், தீவட்டிப்பட்டி, கருப்பூர், பொட்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் வெல்லம் உற்பத்தி ஆலைகளில் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அதிரடி ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 வாரம் நடத்திய சோதனையின் போது, வெல்லம் தயாரிப்பிற்காக ஆலையில் வைத்திருந்த சுமார் 15,800 கிலோ வெள்ளை சர்க்கரையும், 3,320 கிலோ செயற்கை நிறமூட்டிகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கலப்பட வெல்லம் தயாரித்த 22 வெல்ல ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். வெல்லம் தயாரிப்பில் சர்க்கரை, பிளீச்சிங் பவுடர், ஹைட்ரோஸ், சூப்பர் பாஸ்பேட் போன்ற ரசாயனங்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் வெல்ல ஆலைகள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.


