அழிந்து வரும் அரிய வன விலங்குகள் பட்டியலில் வங்காநரி இருக்கிறது. அதனால் வங்காநரியைப் பிடித்து வருவதும், அதனை கயிற்றில் கட்டி ஓடவிட்டு துன்புறுத்துவதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி பெரும் குற்றச்செயலாகும். இதனால் வங்காநரியைப் பிடிப்பது குற்றம் என வனத்துறை அறிவித்துள்ளது. அத்துடன், மலைவாழ் மற்றும் கிராம மக்களிடம் வனத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நூதனமாக வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக யாரேனும் காட்டிற்குள் சென்று வங்காநரியைப் பிடித்து வந்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூபாய் 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி தலைமையிலான வன அதிகாரிகள், கொட்டவாடி, சின்னமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், நாளை (ஜன.09) முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், வரும் ஜன.13-ம் தேதி முதல் வாழப்பாடியை சுற்றியுள்ள கிராமங்களிலும், கல்வராயன் மலை, இதர கரடுகளில் 60 வன ஊழியர்கள் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


-SXgDfGgJfO.jpg)