ட்ரெண்டிங்

தி.மு.க.வினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!

 

சேலத்தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தி.மு.க.வினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

 

நாளை (ஜன.21) சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இன்று (ஜன.20) மாலையே சேலம் மாவட்டத்திற்கு வருகைத் தரவுள்ளனர்.

 

மாநாட்டு பாதுகாப்புப் பணிகளில் சுமார் 8,000- க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. மாநாடு நடைபெறவுள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், தி.மு.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்! லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் கட்சியின் இளைஞரணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.

 

மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு தி.மு.க. தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது. இந்தியாவின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி, பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.