ட்ரெண்டிங்

ஏற்காடு மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஒற்றைச் சாளர முறையில் கட்டட வரைபட அனுமதி மற்றும் மனைப்பிரிவு அனுமதி பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், ஏற்காடு மலையிடப் பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் குடியிருப்பு கட்டடம் கட்ட 250 சதுர மீட்டர் அதாவது 2691 சதுர அடிக்கு உட்பட்ட தரைத்தளம் மற்றும் தரைத்தளத்துடன் முதல்தளம் மட்டும் 7 மீட்டர் உயரத்திற்குட்பட்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு வனத்துறை, கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை ஆகிய துறைகளின் தடையின்மைச் சான்றுடன் விண்ணப்பித்து இணையதளம் வாயிலாக ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெற்றுக் கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய 250 சதுர மீட்டருக்கு மேல் உள்ள குடியிருப்பு மற்றும் பிற வணிக கட்டுமானங்களுக்கும் வனத்துறை, கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெறப்பட்டு HACA Committee மற்றும் AAA Committee ஆகியவற்றின் முன்அனுமதியுடன் கட்டிட அனுமதி மற்றும் மனைப்பிரிவு அனுமதி ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறாக, மேற்கண்டவாறு அனுமதியின்றிக் கட்டடம் மற்றும் மனைப்பிரிவு அபிவிருத்திகள் மேற்கொள்ளக் கூடாது எனவும், நில அமைப்புகளில் மாறுபாடு செய்தல் மற்றும் காடுகளை அழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும், இணையதளம் மூலம் வழங்கப்படும் வரைபட அனுமதிக்கு மாறாகவோ, கூடுதலாக கட்டுமானங்கள் அமைப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.