விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும், சாதனைகளும்! 

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்து, பி.சி.சி.ஐ.க்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். 

தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறந்த பங்களிப்பை வழங்கிய வீரர் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 சதங்கள் உள்பட 3,503 ரன்களை எடுத்துள்ளார். 

இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 2ஆவது இடத்தில் இருக்கிறார் அஸ்வின். டெஸ்டில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்று ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார். 

அனில் கும்ளேவுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.