ட்ரெண்டிங்

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவும், காரசார விவாதமும்! 

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மத்தியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று (டிச.17) காலை 11.00 மணிக்கு தாக்கல் செய்தார். மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

மசோதா மீது காரசார விவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரை செய்தார். 

மேலும், கூட்டுக்குழு பரிசீலனையின் போது, அனைத்துக் கட்சிகளும் விரிவாகக் கருத்துக் கூறலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதையடுத்து, கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவைத் தாக்கல் செய்ய 269 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். 

எதிராக 198 எம்.பி.க்கள் வாக்களித்தனர். மக்களவையில் நடந்த மின்னணு வாக்கெடுப்பை அடுத்து மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.