ட்ரெண்டிங்

சேலத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது!

 

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த பொங்கல் பரிசுத்தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, இ.ஆ.ப. சேலம் அஸ்தம்பட்டி, சீரங்கபாளையம் நியாய விலைக் கடையில் இன்று (ஜன.09) குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். 

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

 

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசுத் தொகுப்பினை இன்றைய தினம் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் 1,264 முழு நேரம் மற்றும் 473 பகுதி நேரம் என மொத்தம் 1,737 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 10,77,575 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் 983 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தம் 10,78,558 குடும்பங்களுக்கு ரூபாய் 12.18 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

 

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ஏதுவாக ஜன.03 முதல் ஜன.08 வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்றையதினம் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

 

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமின்றி நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

 

பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட்டு வரும் பணி குறித்த கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0427-2415784, 0427-2451943 மற்றும் 73387-21707 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மீராபாய், அஸ்தம்பட்டி மண்டலக் குழுத்தலைவர் உமாராணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொ) ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.