ட்ரெண்டிங்

கொலைச் செய்த வழக்கில் 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள காட்டு பிள்ளையார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது அண்ணன் விஜயன். இந்த நிலையில், விஜயன் உயிரிழந்தார். கோபாலுக்கு, விஜயன் குடும்பத்தினருக்கும் இடையே பாகப் பிரிவினைத் தொடர்பான பிரச்சனை நிலவி வந்துள்ளது. 

இந்த சூழலில், கடந்த 2017- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30- ஆம் தேதி வேலை செய்துக் கொண்டிருந்த கோபாலை, விஜயனின் மகன் மற்றும் அவரது உறவினர்கள் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கோபால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இந்த நிலையில், கோபால் குடும்பத்தினர் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், விஜயனின் மகன் குணசேகரன் உள்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கு சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ரவி தீர்ப்பளித்துள்ளார். 

தீர்ப்பில், குணசேகரன், ராஜி, பாரதி, சாந்தாமணி, ரகு, குருசாமி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், குருசாமி உயிரிழந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மற்ற ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 7,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து, குற்றவாளிகள் அனைவரும் சேலம் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் இரண்டு பெண்கள், பெண்களுக்கான சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.