கூவத்தூர் விவகாரம் தொடர்பாக, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் ஏ.வி.ராஜுவுக்கு அ.தி.மு.க. சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டு, அ.தி.மு.க.வை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகை த்ரிஷா, கீழ்த்தரமான, கேவலமான மனிதர்கள் மீது தேவையான, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
இதனிடையே, தான் த்ரிஷாவை பற்றி பேசவில்லை எனவும், தன்னை தவறாக சித்தரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் எனவும், நடிகை த்ரிஷாவின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் ஏ.வி.ராஜு விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், கூவத்தூர் விவகாரம் தொடர்பாக, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஏ.வி.ராஜுவுக்கு சேலம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் இன்பத்துரையும், ஏ.வி.ராஜுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், 24 மணி நேரத்தில் மன்னிப்புக் கோராவிட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோரப்பட்டுள்ளது.


