சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை கிராமத்தில் அருநூற்றுமலை சரிவு மற்றும் புங்கமடுவு சரிவில் இருந்து ஆனைமடுவு ஆறு உற்பத்தியாகிறது. ஆனைமடுவு நீர்த்தேக்கம் ஆனைமடுவு ஆற்றின் குறுக்கே 267 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் ஆகும். இவ்வணை 1993- ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு பாசனப் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனைமடுவு அணையிலிருந்து வலது மற்றும் இடது புறக்கால்வாய் வழியாக 4997.69 ஏக்கர் பாசன வசதி செய்யப்பட்டு புதிய ஆயக்கட்டு நிலங்கள் மூலம் புழுதிக்குட்டை குறிச்சி, சின்னமநாயக்கன்பாளையம், கோலாத்துகோம்பை, நீர்முள்ளிகுட்டை, சந்திரபிள்ளைவலசு ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்கள் 4 அணைக்கட்டுகள் மூலம் 512.45 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆனைமடுவு ஆறு 13 கி.மீ கடந்து கொட்டவாடி அணைக்கட்டில் விழுந்து வசிஷ்ட நதியாக பெயரி பெற்று 7 அணைக்கட்டுகளை கடந்து பெத்தநாயக்கன்பாளையம் அணைக்கட்டு வரை சென்று சுவேதா நதியில் கலக்கிறது. ஆனைமடுவு அணையின் நீர்மட்டம் இன்று (அக்.25) மதிய நிலவரப்படி 12.00 மணியளவில் 64.67 அடியை எட்டியுள்ளது மற்றும் அணைக்கான நீர்வரத்து 286 கன அடியாக உள்ளது.
எனவே அடுத்து ஓரிரு தினங்களுக்குள் 67.25 அடியான முழுக்கொள்ளளவை எட்டும் என்றும், அணையின் பாதுகாப்பு கருதி 65.25 அடியை எட்டும் பட்சத்தில் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் ஆனைமடுவு ஆற்றில் திறந்து விடப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


