சேலம் மாவட்டத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டத்தையொட்டி உழவர் சந்தைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
நேற்று (புதன்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் 13 உழவர் சந்தைகளிலும் பொதுமக்கள் பெருமளவில் வருகை தந்தனர்.
மொத்தம் 1,145 விவசாயிகள் தங்கள் உழைப்பில் விளைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். இவற்றின் மொத்த எடை 360.86 டன் ஆகும்.
ஒரே நாளில் நடந்த இந்த விற்பனையில், காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் சேர்த்து ரூ.1.56 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 86,816 வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைகளுக்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நேரடி லாபம் கிடைக்கும் வகையில் உழவர் சந்தைகள் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்வதால், நடுவிலான வியாபாரிகள் இல்லாமல் நியாயமான விலை கிடைக்கிறது. இதே சமயம் பொதுமக்களும் இயற்கையாக விளைந்த காய்கறிகளை நியாயமான விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அதிகாரிகள் கூறுகையில்,
விவசாயிகள் உழைப்புக்கு நியாயமான விலை கிடைப்பதற்கும்,பொதுமக்கள் நேரடியாக பசுமையான காய்கறிகளை குறைந்த விலையில் பெறுவதற்கும் உழவர் சந்தைகள் உறுதுணையாக உள்ளது. ஆயுத பூஜை நாளில் வழக்கத்தை விட அதிக அளவிலான விற்பனை நடைபெற்றதாக தெரிவித்தனர்.



