சேலம் மாவட்டம், மேட்டூர், வீரக்கல் கிராமத்திலுள்ள கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இன்று (அக்.23) நிவாரண நிதியுதவிக்கான காசோலைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம். மேட்டூர் வட்டம், வீரக்கல் கிராமம், கொத்திக்குட்டை ஏரியில் கடந்த அக்.20- ஆம் தேதி அன்று நண்பகல் 12.00 மணியளவில் வீரக்கல் கிராமம், வீரக்கல் புதுகாலனியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் சிவநந்தினி (வயது 20), மகன் சிவகிரி (வயது 10) மற்றும் முனுசாமி என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (வயது 14) ஆகிய மூவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதனடிப்படையில், இன்றையதினம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.


