சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவிஇ.ஆ.ப., இன்று (செப்.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,
பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஊராட்சி பொது வளர்ச்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், 15- வது ஒன்றிய நிதிக் குழு, பாரத பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூபாய் 140.47 கோடி மதிப்பீட்டிலான 4,805 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 3,855 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 950 பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டை மாரியம்மன் கோயில் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு
மேற்கொண்டு டெங்கு கொசுக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி
உருவாகாத வண்ணம் பார்த்துகொள்ளுதல் உள்ளிட்ட பொதுமக்களுக்கான
விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்ளவும், உள்ளாட்சி
அமைப்புகள் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தி ஆகாதவண்ணம் தங்கள்
பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை முனைப்புடன் மேற்கொள்ள
வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டைமாரியம்மன் கோயில், பல்பாக்கி, காமலாபுரம் மற்றும் நாரணாபுரம் ஊராட்சிகளில் தலா ரூபாய் 3.10 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 9.72 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூபாய் 16.55 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், காமலாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.94 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டு வருவதையும்,
காமலாபுரம் ஊராட்சியில் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.20 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் சீரமைக்கும் பணியினையும், நாரணம்பாளையம் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூபாய் 67.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம் குறித்தும், எட்டிக்குட்டப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 31.46 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணி உள்ளிட்ட ஓமலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூபாய் 1.44 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் 12 வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகள் அனைத்தையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட
ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்தார்.



