ட்ரெண்டிங்

குரும்பப்பட்டி பூங்காவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி!

 

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், நுழைவுக் கட்டணம் செலுத்துவதற்கான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

 

சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று குரும்பப்பட்டி பூங்கா. இந்த பூங்கா ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டின் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு நாள்தோறும் 200- க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனர். விடுமுறை நாட்களில் 500- க்கும் மேற்பட்டோர் வந்துச் செல்கின்றனர்.

 

இந்த பூங்காவில் மான், மயில், குரங்கு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முதலில் 31 ஏக்கரைக் கொண்ட இந்த பூங்கா, பின்னர் தரம் உயர்த்தப்பட்டு, 105 ஏக்கராக விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையை வனத்துறை எடுத்துள்ளது.

 

இந்த சூழலில், பூங்காவுக்குள் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் செலுத்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இல்லாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், "வனத்துறை உடனடியாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையைத் தொடங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.

 

இது குறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் சஷாங்க் கூறுகையில், "டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதி ஏற்படுத்தப்படும்; இது தொடர்பாக தனியார் வங்கிக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.