சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், மணிவிழுந்தான் ஊராட்சி, இராமசேசபுரத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது.
இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் கடைகோடி கிராமங்களில் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற வகையில் மாதந்தோறும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் அனைத்து அரசு அலுவலர்களும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடமிருந்து பெற்ற கோரிக்கை மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைவாசல் வட்டத்தில் மணிவிழுந்தான் ஊராட்சியானது மணிவிழுந்தான் காலனி, வசந்தபுரம், இராமசேசபுரம், இராமானுஜபுரம், முட்டல், பூமரத்துப்பட்டி, மணிவிழுந்தான் தெற்கு, மணிவிழுந்தான் வடக்கு, வடக்கு புதூர், தெற்கு புதூர், குமாரபாளையம், ரெட்டிகரடு உள்ளிட்ட குக்கிராமங்களை உள்ளடக்கிய இவ்வூராட்சியில் சிறப்பு கவனம் எடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
இப்பகுதியானது இயற்கை எழில் கொண்ட பகுதியாக உள்ளது. இங்கு சாகோ உட்பட பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் உள்ளது. மஞ்சளும், நெல்லும் விளையும் இப்பகுதியானது செழுமையுடன் உள்ளது. இங்குள்ளவர்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை முழுமையான முறையில் பயன்படுத்தி தொழில்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும். இம்முகாமானது பொதுமக்களுக்கு வழிகாட்டும் வகையில் அரசின் திட்டங்களை எளிய முறையில் தெரிந்து கொள்ள இன்று நடத்தப்பட்டு வருகிறது.
இம்முகாமிற்கு மாவட்ட நிலையிலான அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் வருகைபுரிந்து தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளனர். தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெற்றுள்ள பயனாளிகள் இதனை மென்மேலும் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றையதினம் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கோரி பொதுமக்கள் நேரடியாக மனு கொடுத்துள்ளனர். இம்முகாமில் அளிக்கப்பட்ட மனுக்களை வருவாய்த்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு, அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் வீட்டுமனைப் பட்டா. நத்தம் பட்டா மாறுதல், இணையவழி கட்டா மாறுதல், கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான கடனுதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் 132 பயனாளிகளுக்கு ரூபாய் 1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனை மற்றம் வேளாண் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம், சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றம் அவற்றைப்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள், தோட்டக்கலை துணை இயக்குநர் மோகன், உதவி இயக்குநர், நில அளவைகள் இராஜசேகர், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், தலைவாசல் வருவாய் வட்டாட்சியர் பாலாஜி, மணிவிழுந்தான் ஊராட்சிமன்றத் தலைவர் விஜயகுமாரி நடேசன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


