செமஸ்டர் தேர்வுக் கட்டணத்தை சுமார் 50% வரை உயர்த்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 432 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 432 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
வரும் நவம்பர் மாதத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், செமஸ்டர் தேர்வுக் கட்டணத்தை சுமார் 50% வரை உயர்த்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இதனால் மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல், செய்முறை தேர்வுக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இளநிலை பட்டப்படிப்பு ஆய்வறிக்கைக் கட்டணம் ரூபாய் 300- லிருந்து ரூபாய் 450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் 450- லிருந்து ரூபாய் 675 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை செமஸ்டர் தேர்வு, செயல்முறை தேர்வு, செயல்முறை பயிற்சி கட்டணம் ரூபாய் 450- லிருந்து ரூபாய் 670 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், பட்டப்படிப்பு சான்றிதழ் கட்டணம் ரூபாய் 1,000- லிருந்து ரூபாய் 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

-iw7AGprdrK.jpg )
