சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மே 22 முதல் 28 வரை ஏழு நாட்கள் கோலாகலம் – சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ண மலர் அலங்காரங்கள்!
ஏற்காடு பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரபலமான கோடை விழாவான 49வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு வரும் மே 22ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை ஏழு நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கோடை கால சுற்றுலாவை முன்னிட்டு நடத்தப்படும் இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏற்காட்டின் இயற்கை சூழல், குளிர்ந்த காலநிலை மற்றும் மலர் அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகமாக கவரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவின் முக்கிய அம்சமாக அண்ணா பூங்காவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு சிறப்பு வடிவமைப்புகள், அலங்கார அமைப்புகள் மற்றும் கலை நயமிக்க மலர் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் பழ கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. ஆரோக்கியமான குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, கோலப் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தினமும் மாலை நேரங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கோடை விழாவை முன்னிட்டு ஏற்காடு முழுவதும் சாலை வசதி, தூய்மை பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுற்றுலா வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் விழாவை அனுபவிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது


