ட்ரெண்டிங்

கட்சிக் கொடிக்கு பின் வரலாற்றுக் குறிப்பு உள்ளது- நடிகர் விஜய்! 

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் விஜய், த.வெ.க.வின் கொடியையும், கட்சியின் பாடல்களையும் அறிமுகப்படுத்தியதுடன், கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பேசினார். 

அப்போது பேசிய நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியது பெருமையாக உள்ளது. நம் கட்சிக் கொடிக்கு பின்னணியாக ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது; அதை பின்னர் தெரிவிக்கிறேன். கொடியில் இடம் பெற்றுள்ள படங்களின் விளக்கத்தை முதல் மாநில மாநாட்டில் தெரிவிக்கிறேன். முதல் மாநில மாநாடு எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். 

இவ்வளவு நாள் நமக்காக உழைத்தோம்; தமிழ்நாட்டு மக்களுக்காக இனி உழைப்போம். தமிழ்நாட்டு மக்களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைப்போம். சந்தோஷமா, கெத்தா நம்முடைய கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம். கட்சிக் கொடியாக நான் பார்க்கவில்லை; வருங்காலத் தலைமுறைக்கான வெற்றிக் கொடி. என் தந்தை, தாய் நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. 

முறையான அனுமதியைப் பெற்று தொண்டர்கள் அவரவர் இல்லத்தில் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும். அனைவரிடமும், தோழமைப் பாராட்டி, உரிய அனுமதிப் பெற்று கொடியை ஏற்றிக் கொண்டாடுங்கள். எல்லோரும் நம்பிக்கையோடு இருங்கள்; நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம் எனத் தெரிவித்துள்ளார்.