ட்ரெண்டிங்

சேலத்தில் 385 ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்கள்!

சேலத்தில் 385 ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்கள்! 

வருடத்தில் முக்கிய நாட்களில் மட்டும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 15) 77-வது சுதந்திர தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 385 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு, பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு அதிகாரிகள் பதிலளித்தனர். 

குறிப்பாக, ஊராட்சிகளில் அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டப் பணிகளுக்கு எவ்வளவு செலவானது? என்பது குறித்தும், எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? என்பது குறித்தும் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்கினர். பின்னர், பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 

சேலத்தில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் எந்தவித சலசலப்புமின்றி ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது. பனமரத்துப்பட்டி ஒன்றியம், பாரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பார்வையாளராக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்து கொண்டார். அப்போது, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். 

மாவட்ட ஆட்சியருடன், உதவி ஆட்சியர், துறைச் சார்ந்த உயரதிகாரிகளும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.