ட்ரெண்டிங்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியில் நீடிக்கிறது! 

கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடு ஓடுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சுமார் 1 லட்சம் கனஅடியைத் தாண்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று (ஜூலை 30) மாலை 05.00 மணியளவில் 120 அடியை எட்டியுள்ளது. குறிப்பாக, மேட்டூர் அணை 43- வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. 

இன்று (ஜூலை 31) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்கிறது. அணையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 62,870 கனஅடி கனஅடியில் இருந்து 1,25,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. பாசனத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 78,500 கனஅடியில் இருந்து 1.03 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.