ட்ரெண்டிங்

நரிக்குறவர், குருவிக்காரர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்புப் பதிவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றம் செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக அணுகலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்” ஆகிய பிரிவினரை அரசாணை எண் 38, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, (சி.வி.1) நாள்: 17/03/2023 இன் படி பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வேலைவாய்ப்புப் பதிவில் சாதிப்பிரிவினை மாற்றம் செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வேலைவாய்ப்புத் துறை ஆணையரகத்தால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

எனவே, நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தோர் தங்களது பழங்குடியினர் சாதிச் சான்றிதழை, வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்துப் பெற்ற பின்னர், 
வேலைவாய்ப்புப் பதிவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றம் செய்ய அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.