முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்ததாவது, மாவட்ட விளையாட்டுத் துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூபாய் 6,000 வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் https://sdat.tn.gov.in விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவகத்தில் விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தற்போது வருமானம் குறைந்து, வேலை இல்லாத நலிந்த நிலையில் இருக்க வேண்டும். அரசு, தனியார் நிறுவனங்கள் அல்லது ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் (Veteran / Masters Sports meet) வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தகுதியான விளையாட்டுப் போட்டிகள் மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம்,இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பானது 30/04/2025 அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். 2025-ஆம் ஆண்டு பெறப்பட்ட வருமானச் சான்றின்படி விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூபாய் 6,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள், வயது மற்றும் அடையாளச் சான்றிதழ் (ஆதார்), 2025 ஆம் ஆண்டின்படி பிறப்பிடச்சான்று, 2025-ஆம் ஆண்டின்படி வருமானச்சான்று, தொழில் அல்லது விளையாட்டு சார்ந்தவற்றில் ஓய்வு பெற்றதற்கான விவரங்கள் இணைத்து விண்ணப்பித்திட வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் https://sdat.tn.gov.in ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை 31/07/2025 வரை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் இணைத்து 25/07/2025 அன்று மாலை 05.00 மணிக்குள் சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் மட்டுமே நேரில் சமர்ப்பித்திட வேண்டும். சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமையக அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிடத் தேவையில்லை. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


