ட்ரெண்டிங்

கல்வராயன் மலை மக்களின் தற்போதைய நிலை என்ன?- உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது. 

கல்வராயன் மலை மக்கள் மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு இன்று (ஜூலை 10) மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சுப்ரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அரசின் நலத்திட்டங்கள், சலுகைகள், கல்வராயன் மலைப்பகுதி மக்களை சென்றடைந்துள்ளதா? மக்களின் வாக்குகளைப் பெற்ற பின் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் சென்றடைந்ததா? இத்தனை ஆண்டுகள் ஆட்சியர், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் என்ன செய்கின்றனர்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் தமிழ்மணியை நியமித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் ஜூலை 24- ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.