ட்ரெண்டிங்

பட்டாசுகளை ரயில், பேருந்துகளில் எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர

 

பட்டாசுப் பொருட்களை பொதுமக்கள் பயணிக்கும் ரயில், பேருந்துகளில் எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பட்டாசு தயாரிக்கும் இடங்கள். பட்டாசுக்கிடங்குகள் மற்றும் பட்டாசுக் கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

குறிப்பாக, பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று பட்டாசுக் கிடங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் பட்டாசுக் கிடங்குகள் உடனடியாக சீல் வைத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மேலும், தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திறந்தவெளி மைதானங்களில் பட்டாசுக் கடைகளை அமைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல்துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பாதுகாப்பு நலன் கருதி பட்டாசுப் பொருட்களை பொதுமக்கள் பயணிக்கும் ரயில், பேருந்துகள், வாடகை கார் உள்ளிட்ட வாகனங்களில் எக்காரணம் கொண்டும் எடுத்துச் செல்லக்கூடாது எனவும், இதனை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

 

இதன் பொருட்டு சிறப்பு தணிக்கைக் குழு அமைக்கப்பட்டு பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் ஆங்காங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. பட்டாசுகளால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுத்திட பொதுமக்கள், பட்டாசு தயாரிப்பாளர்கள். விற்பனையாளர்கள் என் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.