ட்ரெண்டிங்

வள மீட்பு பூங்காவில் சேலம் ஆட்சியர் நேரில் ஆய்வு! 

சேலம் மாவட்டம், வீரக்கல்புதூர் மற்றும் பி.என்.பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சித் துறையின் கீழ் ரூபாய் 5.35 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, இ.ஆ.ப. இன்று (ஜூலை 03) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்விற்குப்பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 31 பேரூராட்சிப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 133.32 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை பணிகள் மூலம் உயிரி உரங்களாக மாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பணிகளில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிப் பகுதிகளிலும் 364 தூய்மைப்பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 1,040 பணியாளர்கள் என மொத்தம் 1,404 நபர்கள் ஈடுபடுகின்றனர். இப்பணிகளில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களும் தினசரி தூய்மைப்பணிகளை மேற்கொள்வதை தொடர்புடைய அலுவலர்கள் முறையாக கண்காணித்து சுகாதாரமான சுற்றுப்புறத்தை உருவாக்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்றையதினம் வீரக்கல்புதூர் பேரூராட்சி, கருப்பு ரெட்டியூர் பகுதியில் உயிர் அகழ்வு மையம் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும், பேரூராட்சி வள மீட்பு பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஈரக்குப்பைகளை பிரித்தாளும் மையம் மற்றும் திடக்குப்பைகளை பிரித்தாளும் மையங்களின்
செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முருகன் நகர் பகுதியில் ரூபாய் 3.33 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை ஆய்வு மேற்கொண்டு, சாலையின் அகலம், உயரம் உள்ளிட்டவைகள் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட கோம்பூரான்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய நேரத்தில் சுகாதாரமான முறையில் வழங்கிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நபார்டு திட்டத்தின் கீழ் புதுக்காடு முதல் கருப்புரெட்டியூர் வரை ரூபாய் 1.60 கோடி மதிப்பீட்டில் 2.6 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வீரக்கல்புதூர் மற்றும் பி.என்.பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை தரமாகவும். உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.