மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்குத் தேவையான வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 03) சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்ததாவது, மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் 3,260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வருகைதரும் வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக மேற்கொள்ள ஏற்கனவே தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 221 முதல் 224 வரையிலான 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் நாளன்று வாக்களிக்க வருகைதரும் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக சாய்தள வசதிகள், சுகாதார வசதிகள், மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, தேர்தல் நாளன்று வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது வாக்குச்சாவடி மைய வளாகத்தில் தேவைக்கேற்ப சாமியானா பந்தல் உள்ளிட்ட வசதிகள் அமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.


