ட்ரெண்டிங்

"ஒன்பது நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும்"- கலங்கி நிற்கும் விவசாயிகள்! 

மேட்டூர் அணையில் இருந்து இன்னும் ஒன்பது நாட்களுக்கு மட்டுமே தண்ணீரைத் திறந்துவிட முடியும் எனக் கூறப்படுகிறது. அதனால் குறுவை சாகுபடியை எப்படி தொடர்வது எனத் தெரியாமல், தமிழக விவசாயிகள் கலங்கி நிற்கின்றனர். 

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,000 கனஅடியாக உள்ளது. இந்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 5,000 கனஅடிக்கு மேல் உள்ள நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 7,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு 31.24 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்கியிருக்க வேண்டும். இந்த நிலையில், தற்போது மேட்டூர் அணையில் 20 டி.எம்.சி. அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. ஒன்பது நாட்களுக்கு தண்ணீர் திறக்கும் அளவிற்கு மட்டுமே அணையில் தண்ணீர் உள்ளது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் உள்ள நான்கு அணைகளிலும் 220 டி.எம்.சி. அளவிற்கு தண்ணீர் உள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படியும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டியும், காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரியும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். 

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்கப்படாத நிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று மாலை கூடுகிறது. இதில், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர. 

எனினும், காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அரசுக்கு அதிரடி உத்தரவுகளை இன்று பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.