ட்ரெண்டிங்

மாணவ, மாணவிகளிடம் கை, கால்களைப் பிடித்து விட சொன்ன தலைமையாசிரியர்.... பள்ளியை முற்றுகையிட்ட பெ

மாணவ, மாணவிகளிடம் கை, கால்களைப் பிடித்து விட சொன்ன தலைமையாசிரியர்.... பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்! 

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கருங்கல்லூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 144 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான ராஜா, மாணவ, மாணவிகளை நாள்தோறும் கை, கால்களைப் பிடித்து விடச் சொல்லியும், தலையை மசாஜ் செய்து விடச் சொல்லியும் டார்ச்சர் செயதுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, மாணவ, மாணவிகளின் 100- க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் தணிகாசலம், வட்டாட்சியர் முத்துராஜா, கொளத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னராசு ,காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோர் தலைமை ஆசிரியர் ராஜாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பெற்றோர்கள் ஆத்திரத்தில் தலைமை ஆசிரியரை தாக்க முயன்றதால், தலைமை ஆசிரியரைப் பாதுகாப்பாக அழைத்து வந்து வகுப்பறைக்குள் வைத்து பூட்டிப் பாதுகாத்தனர். இதனையடுத்து தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி பெற்றோர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேட்டூரிலிருந்து கர்நாடக மாநிலம், மைசூரு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பெற்றோர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.