சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மற்றும் பிரசித்திப் பெற்ற கோதண்டராமசுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர் வெள்ளோட்டம் இன்று (செப்.17) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
தேர்த்திருவிழா பங்கேற்ற சுமார் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் வெள்ளோட்டத்தையொட்டி, சிறுவர், சிறுமிகள், ராமன், சீதை, அனுமன், லட்சுமணன் உள்ளிட்ட கடவுள் வேடங்களை அணிந்துக் கொண்டு கோயிலுக்குள் வந்தனர். அவர்களைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.
பின்னர், பக்தர்கள் ராமன், சீதையுடன் செல்பி புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர்.
தேர் திருவிழாவையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
ராமர் இந்த கோயிலுக்கு வந்து தங்கியதாக வரலாறுகள் கூறும் நிலையில், சேலம் மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல், கரூர், கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர்.


