ட்ரெண்டிங்

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் அலங்கார வடிவங்கள்! 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47- வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி மே 22- ஆம் தேதி அன்று தொடங்கி, வரும் மே 26- ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கிணங்க, தோட்டக்கலைத்துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க்காட்சி மட்டும் மே 30- ஆம் தேதி அன்று வரை கூடுதலாக 4 நாட்களுக்கு நடைபெறும் வகையில் நீட்டிக்கப்பட்டு மலர்க்காட்சி நடைபெற்று வருகிறது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரம்மாண்ட காற்றாலை, பவளப்பாறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை, கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டொனால்டு டக், மிக்கிமௌஸ், டாம் & ஜெரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மலர்க்காட்சி தொடங்கப்பட்டு தற்போது ஒரு வாரம் காலம் ஆனதால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வடிவமைப்புகளில் ஒரு சில இடங்களில் மலர்கள் வாடிய நிலையில் காணப்பட்டது. தற்போது தோட்டக்கலைத்துறையினர் மூலம் வாடிய பூக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஏற்காடு மலர்க்காட்சி மேலும் புதுப்பொழிவுடன் காட்சியளிக்கிறது. இது சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும், ஏற்காடு அரசு தாவரவியல் பூங்காவில் இம்முறை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மீன் வடிவமும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்காடு மலர்க்காட்சி வரும் மே 30- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.