ட்ரெண்டிங்

நாய்களின் கண்கவர் சாகசங்கள்....கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்! 

47-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி மே 22- ஆம் தேதி அன்று தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வருகிறது. இக்கோடை விழாவில் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

47-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி மே 22- ஆம் தேதி அன்று தொடங்கி 26.05.2024 நாளை வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கிணங்க தோட்டக்கலைத்துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்காட்சி மட்டும் வரும் 30.05.2024 அன்று வரை கூடுதலாக 4 நாட்களுக்கு நடைபெறும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

47-வது ஏற்காடு கோடை விழாவினை சிறப்பாக நடைபெற உதவிய அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டி நாளை (மே 26) மாலை 04.00 மணியளவில் ஏற்காடு ஏரிப்பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

ஏற்காடு கோடை விழாவின் 4-ஆம் நாளான இன்றைய தினம் (மே 25) கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி மற்றும் குதிரைகளின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இக்கண்காட்சியில் பொதுமக்கள். சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

மேலும், இக்கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த செல்லப் பிராணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் சுற்றுலாத்துறை மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையின் சார்பில் பல்சுவை நிகழ்ச்சிகள், ஏற்காடு மலைவாழ் மக்களின் சேர்வையாட்டம், சிலம்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

நாளை (மே 26) ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் குழந்தைகளுக்கான தளிர்நடை போட்டி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து சுற்றுலா மற்றும் கலைபண்பாட்டுத்துறையின் சார்பில் பரதநாட்டியம், நகரி மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.