சேலம் ஓமலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டிற்குள் டெம்போ வாகனம் புகுந்தது.
சேலம் மாவட்டம், ஓமலூர்- தாரமங்கலம் சாலையில் சமையல் கேஸ் கொண்டு செல்வதற்கான ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிக்கம்பட்டி சாலையோரமாக டெம்போ வேன் ஒன்றில் 2 கேஸ் சிலிண்டர்கள், வெல்டிங் மெஷின்களைக் கொண்டு பணிகளை செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், டெம்போ வாகனம் மீது பின்னால் வந்த லாரி வேகமாக மோதியதில் அந்த டெம்போ வாகனம் சாலையோரமாக இருந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரான சின்னப்பன் என்பவரின் வீட்டிற்குள் புகுந்தது.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அதே நேரம் வீடு சேதமடைந்த நிலையில், டெம்போ வாகனத்தில் அமர்ந்திருந்த வட மாநில தொழிலாளர்கள் இருவர் காயமடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


