சேலத்தில் உள்ள பிசிசி திருமண மண்டபத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் இன்று (ஜன.28) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பா.ம.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அருள், பா.ம.க.வின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சதாசிவம் மற்றும் பா.ம.க.வின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பா.ம.க.வின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர்.அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் இனிவரும் காலங்களில் கூட்டணி கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும்; தனியாக யாரும் ஆட்சிக்கு வர முடியாது. வன்னியர்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே முதல்வர் பார்க்கிறார்.
வரும் தேர்தலில் இதன் விளைவு தெரியும். வீரபாண்டியார் இப்போது இருந்திருந்தால் நமக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கிடைத்திருக்கும். முதல்வரிரிடம் சண்டை போட்டாவது அவர் வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை பெற்று தந்திருப்பார்.
தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுகின்றனர்; அவர்களின் இடஒதுக்கீடு நோக்கம் நிறைவேறவில்லை; வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். மேட்டூர் அணை உபரிநீரை வசிஷ்ட நதியுடன் இணைத்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.



