ட்ரெண்டிங்

மேய்ச்சல் நிலமாக மாறி வரும் காவிரி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 103 அடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 48.76 அடியாகக் குறைந்துள்ளது. 

கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் 12- ஆம் தேதி அன்று குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு போதிய நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. 

குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும் சூழலில், அகன்று விரிந்த காவிரி தற்போது விளை நிலமாகவும், மேய்ச்சல் நிலமாகவும் மாறி வருகிறது. இன்று (மே 22) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49 அடியில் இருந்து 48.76 அடியாகக் குறைந்துள்ளது. நீர் இருப்பு 17.04 டி.எம்.சி.யாக உள்ளது. 

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 402 கனஅடியில் இருந்து 217 கனஅடியாகக் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 2,100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.