ட்ரெண்டிங்

சுற்றுலா வேன் ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து! 

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா சென்ற வேன் சிந்து (Sindh) நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

சேலம் மாவட்டம், அழகாபுரத்தில் வசித்து வருபவர் கற்பகவள்ளி. இவர் ஏற்காடு தலைச்சோலை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் செல்வம் பூண்டு வியாபாரி. இந்த தம்பதிக்கு லக்ஷனா, ப்ரீத்தா என்ற 2 மகள்கள் உள்ளனர். 

இந்த நிலையில், குழந்தைகளுக்கு கோடைக்கால விடுமுறை என்பதால், கற்பகவள்ளி தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலாச் சென்றுள்ளார். ஜம்மு காஷ்மீரில் கற்பகவள்ளியின் குடும்பத்தினர், நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பயணி மற்றும் ஓட்டுநர்கள் இருவர் என மொத்தம் 8 பேர் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். 

அப்போது, சோன்மார்க் பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் நிலைத்தடுமாறி, சிந்து நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. வேனில் இருந்த ஓட்டுநர்கள் வெளியே குதித்து காயங்களுடன் தப்பித்த நிலையில், கற்பகவள்ளியின் குடும்பத்தினர் உள்பட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.