ட்ரெண்டிங்

சேலத்தில் முடிவுற்றத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.05) காலை 10.30 மணியளவில் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சேலம் மாநகராட்சியில் உள்ள அய்யந்திருமாளிகையில் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையம் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்கிறார்.

 

மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் பொருட்டும், வாசிப்பை நேசிக்கச் செய்திடவும் அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், சேலம் மாநகராட்சி, அய்யந்திருமாளிகை அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது.

 

இம்மையத்தில் வாசிப்பு அறை, ஸ்மார்ட் வகுப்பறை, கணினி மையம், நூலகர் அறை, கண்காணிப்பு கேமிரா கட்டுப்பாட்டு அறை, மேலாளர் அலுவலகம் மற்றும் இருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்புக் கேமிராக்கள், எல்.சி.டி தொலைக்காட்சி, புரொஜெக்டர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவுசார் மையம் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதன் மூலம் சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயன்பெறுவார்கள்.

 

நாளைய தினம் சேலம் அய்யந்திருமாளிகை அறிவுசார் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர். மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.