ட்ரெண்டிங்

மிதிவண்டிப் போட்டிகளில் பரிசுகளை குவித்த பள்ளி மாணவ, மாணவிகள்!

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப.மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் இன்று (அக்.14) காலை 08.00 மணிக்கு கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சேலம் மாவட்டத்தில் 2023- ஆம் ஆண்டிற்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டி 13 வயது. 15 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 15 கி.மீ., 20 கி.மீ. தூரம் கடக்கும் வகையில் இப்போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியானது மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் துவங்கி வயதிற்கேற்ப கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து ஆபீஸ், ஏற்காடு அடிவாரம் சென்று மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடைந்தது.

இதில் வெற்றிபெற்ற ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூபாய் 5,000,  இரண்டாம் பரிசாக 3,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 2,000 மற்றும் நான்கு முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 250 பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இப்போட்டியில் 600 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட சைக்கிள் சங்கத் தலைவர் நாசர்கான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.