ட்ரெண்டிங்

பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு!

சேலம் மாவட்ட அலுவலகம் அருகே உள்ள பழைய நாட்டாண்மை கழகக் கட்டிடத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் 1927- ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் உதவிக் கோட்ட பொறியாளர் அலுவலகம், பால்வளம் துணைப் பதிவாளர் அலுவலகம், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம், சேலம் மாவட்டப் பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சங்கம் ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. இந்த பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 

இந்த அலுவலக வளாகத்தில் செடி, கொடிகள், மரங்கள் அதிகளவில் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று (செப்.11) காலை 11.00 மணியளவில், சமையல் கூடத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து தகவலறிந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், சமையல் கூடத்திற்கு சென்று 8 அடி நீளமுள்ள மஞ்சள் சாரை வகையைச் சேர்ந்த பாம்பை லாவகமாகப் பிடித்து , சேலம் மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விடப்பட்டது. 

பழைய நாட்டாண்மைக் கழகக் கட்டிடத்தில் தொடர்ந்து பாம்புகள் புகுந்து வருவது, அங்கு பணிபுரியும் ஊழியர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தை முறையாகப் பராமரித்து, பதுங்கியிருக்கும் பாம்புகளை பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.