ட்ரெண்டிங்

சோதனைச் சாவடிகளில் லஞ்சம் தர வேண்டாம்.... லாரி ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்!

கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே வரி என GST வரிக் கொள்கையை மத்திய நடைமுறைப்படுத்தியது. இதனால் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கான GST வரி செலுத்துவதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே வரி விகிதமாக இருக்கிறது.

மேலும் கனரக வாகனங்களுக்கான காலாண்டு வரி, பர்மிட், பசுமை வரி உள்ளிட்ட அனைத்தையும் VAHAN மற்றும் Mparivahan போன்ற போக்குவரத்துதுறையின் இணையதளம், செயலிகளில் ஆன்லைனில் செலுத்தும் வசதிகள் தற்போது நடைமுறையில் இருப்பதால் லாரி உரிமையாளர்களுக்கும், தங்களது வாகனங்களுக்கான வரிகளை செலுத்துவது மிகவும் எளிதான ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் கடந்த 06/09/2021 அன்று நாட்டின் அனைத்து போக்குவரத்து செயலாளர். ஆணையர்களுக்கு GST வரிக் கொள்கை அமல்படுத்திய பிறகு மாநில எல்லை சோதனை சாவடிகளின் தேவை அவசியமற்றதாகவும், இதனால் வாகன ஓட்டுநர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அலைக்கழிக்கப்படுவதாகவும், சோதனை சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்களை நிறுத்திக் காக்க வைக்கப்படும் சூழல் நிலவுவதால் மாநில எல்லை சோதனை சாவடிகளை முற்றிலும் அகற்றிட வழிகாட்டு நெறிமுறையினை பிறப்பித்தது.

ஆனால் தமிழக உள்பட பல மாநிலங்கள் இதனை நடைமுறைப்படுத்தாமல் உள்ளன. இதனால் சோதனை சாவடிகளைக் கடந்து செல்ல லஞ்சம் கொடுக்கும் நிலை உள்ளது. லஞ்சம் தர மறுக்கும் ஓட்டுநர்களை தரக்குறைவாக பேசுவதும், தாக்கப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே, வரும் டிச.25 முதல் கனரக வாகன உரிமையாளர்கள். ஓட்டுநர்கள் யாரும் எல்லை சோதனை சாவடிகளில் லஞ்சம் தர வேண்டாம் என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் புதுடெல்லி, தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் மற்றும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்-தமிழ்நாடு சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.