ட்ரெண்டிங்

பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரியில் தீ.....காவல்துறையினர் விசாரணை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டைக்கு பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று சேலம் வழியாக சென்றுக் கொண்டிருந்தது. நேற்று (ஆகஸ்ட் 05) அதிகாலை 04.30 மணியளவில் சங்ககிரி வழியாக, சென்று கொண்டிருந்த லாரி, சங்ககிரி- ஈரோடு தாமஸ் காலனி அருகே லாரியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதையடுத்து, லாரியை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர், உடனடியாக கீழே இறங்கினார். 

பஞ்சு மூட்டைகள் தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சரக்கு லாரி ஓட்டுநர், உடனடியாக சங்ககிரி தீயணைப்பு நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், லாரியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது. 

இது குறித்து தகவலறிந்து வந்த சங்ககிரி காவல்துறையினர், தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், லாரியின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்து காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பிரபு என்பதும் தெரிய வந்துள்ளது.