ட்ரெண்டிங்

வாகனங்களில் GPS கருவி பொருத்தும் பணி! 

தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் GPS கருவி பொருத்தும் பணி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இன்று (ஏப்ரல் 16) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்விற்குப்பின் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்ததாவது, மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,260 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், சேலம் மாவட்டத்தில் 334 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய நிலை அலுவலர்களுக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக பயிற்சி அளித்துள்ளனர். வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளான ஏப்ரல் 18- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்வது முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று வாக்குச்சாவடி மையங்களில் முறையாக தேர்தல் நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுற்றவுடன் வாக்குப்பதிவு இயந்திரத்தினை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் சென்று ஒப்படைப்பது வரை அனைத்து பணிகளையும் கண்காணித்திட மண்டல அலுவலர்களுக்கு உரிய
அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மண்டல அலுவலர்கள் தேர்தல் பணிக்காக பயன்படுத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்திலும் GPS கருவி இன்றைய தினம் பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளது. இவ்வாகனங்களின் இயக்கங்கள் அனைத்தும் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமையப் பெற்றுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.