கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் இருந்து சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தி வரப்படுவதாக தீவட்டிப்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான காவல்துறையினர், குதிரைக்குத்திப்பள்ளம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் இருந்த தக்காளி காலிப்பெட்டிகளை அகற்றி பார்த்தபோது, வாகனத்தில் ரகசிய அறை இருந்தது தெரிய வந்தது. மேலே இருந்த மரப்பலகையை எடுத்துவிட்டு பார்த்த காவல்துறையினர், மூட்டை மூட்டையாகக் குட்கா இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, சரக்கு வாகன ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர், சுமார் 1.90 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேட்டூருக்கு அருகே உள்ள மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இளையபாரதி (வயது 27) என்பது தெரிய வந்தது.
கஞ்சா, குட்கா போன்ற தமிழக அரசால் தடைச் செய்யப்பட்டப் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது சேலத்தில் அதிகரித்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

