பட்டியலினத்தவரை இழிவாகப் பேசியதாக அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு மதத்தவரிடையே வெறுப்புணர்வைத் தூண்டியதாக பா.ஜ.க.வின் மாநில அண்ணாமலை மீது சேலம் நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, வரும் மார்ச் மாதம் நேரில் விசாரணைக்கு ஆஜராக அண்ணாமலைக்கு சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில், தன் மீதான மனுவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், மனுவை ரத்துச் செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. புகார் மனுவை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்ய மறுத்ததை எதிர்த்து அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபான்கர் தத்தா அமர்வு முன்பு இன்று (பிப்.26) காலை 11.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை விசாரிக்க கீழமை நீதிமன்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். அத்துடன், அண்ணாமலை பேசியதன் முழு விவரத்தின் மொழிபெயர்ப்பையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக பியூஷ் மானுஷ் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


-SXgDfGgJfO.jpg)